search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலங்கட்டி மழை"

    கம்பத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆலங்கட்டி மழை பெய்தது. மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் பொதுமக்கள் இருளில் தவித்தனர்.
    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாகவே பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

    இந்த ஆண்டு கோடை மழை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. சாரல் மழை பெய்தபோதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்த நிலையில் நேற்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. மேலும் பலன் தரும் நிலையில் இருந்த ஏராளமான வாழைகள் காற்றுக்கு சேதம் அடைந்தது.

    பல இடங்களில் மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இருந்தபோதும் காலைவரை மின் வினியோகம் இல்லை. இதனால் இரவு முழுவதும் இருளில் தவித்தனர்.

    சமீப காலமாக கோடை மழையில் காற்றின் வேகமே அதிகமாக உள்ளது. மழைப்பொழிவு போதிய அளவு இல்லை. சூறாவளி காற்று சுழன்று வீசுவதால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

    மேலும் செங்கல் காளவாசலில் வைக்கப்பட்டிருந்த செங்கலும் கரைந்து ஓடியதால் செங்கல் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.



    ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக ஆலங்கட்டி மழை பெய்தது. சாலையில் கிடந்த ஐஸ்கட்டிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    புஜேரா :

    ஐக்கிய அரபு அமீரக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆனால் புஜேரா, உம் அல் குவைன் மற்றும் ராசல் கைமா உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை இல்லாத வகையில் திடீரென்று ஆலங்கட்டி மழை பெய்தது.

    பொதுவாக வானில் இருந்து மழைத்துளிகள் ஐஸ்கட்டிகளாக மாறி பொழிவது ‘ஆலங்கட்டி மழை’ அல்லது ஐஸ் கட்டிமழை எனப்படுகிறது. சாதாரண மழையோடு ‘ஆலங்கட்டிகள்’ விழுவதை பார்த்திருக்கலாம். பெரும்பாலும் இவை முழுவதுமாக ஐஸ்கட்டிகளாக விழுவதில்லை.

    ஆனால் நேற்று அமீரகத்தில் முதல்முறையாக ஒரு ‘கோல்ப்’ பந்து அளவில் ஐஸ்கட்டிகள் சடசடவென்று விழுந்தன. ஐஸ்கட்டிகள் விழுந்ததால் பயந்துபோன சிலர் ஒதுங்க இடம்தேடி ஓடி சென்றனர்.

    இதனால் வாகனங்கள் சாலைகளில் செல்ல தடுமாறின. சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. சாலையில் கிடந்த ஐஸ் கட்டிகளில் சிலர் விளையாடியும் மகிழ்ந்தனர்.
    திருத்துறைப் பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் 5 வீடுகள் சேதம் அடைந்தன.

    திருத்துறைப்பூண்டி:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவ மழை சரியாக பெய்யவில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும் ஏரிகள், குளங்கள் வறண்டு நிலத்தடி நீர் குறைந்து போனது. ஆடு, மாடுகளுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலை நிலவியது.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் ஆட்டூர், எழிலூர், நுணாக்காடு, கொத்தமங்கலம், விட்டுக்கட்டி, வரம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

    ஆட்டூர் பண்டார ஓடை பகுதியில் மரம் முறிந்து மின்கம்பிகளில் விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்தன. மின்ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் மின்சாரம் நிறுத்தப்பட்டு உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. இதேபோல நுணாக்காடு மெயின் ரோட்டை சேர்ந்த விவசாயி சுப்பையன் (வயது 60), சந்தானம் (60), மலர் (40), பாலசுப்பிரமணியன் (29), ஜெகநாதன் (50) ஆகிய 5 பேரின் வீட்டின் கூரைகள் மீது மரம் விழுந்ததால் வீடுகள் சேதமாயின. இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு, உரிய இழப்பீடு பெற்று தருவதாக உறுதியளித்தார்.

    தர்மபுரி நகரமே அரண்டுபோகும் அளவில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    தர்மபுரி:

    கோடை வெயில் தற்போது வாட்டி வதைக்கிறது. இதனால் தர்மபுரி நகரமே கடும் வெப்பத்தால் சுட்டெரிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் ஆங்காங்கே பொது மக்கள் வீடுகளிலே முடங்கி கிடக்கின்றனர். சிலர் வெப்பத்தை தணிக்க குளிர்ச்சியாக இருக்கக்கூடிய சுற்றுலா தளத்தை தேடிச் செல்கின்றனர்.

    இந்நிலையில் தர்மபுரியில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்வது வழக்கமாகியுள்ளது. அவ்வவ்போது இவ்வாறு மழை பெய்வதால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை காப்பாற்றி கொள்கின்றனர். இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் தர்மபுரி நகரமே அரண்டுபோகும் அளவில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், பலத்த மழையின் காரணமாக நகரின் பெரும்பாலான முக்கிய பகுதிகள் நிலை குலைந்து விட்டன.

    அப்பாவு நகரமே அரண்டுபோகும் அளவில் நேற்று பெய்த மழையினால் சாலையோர மரங்கள் பல வீடுகளின் மேல் சரிந்து விழுந்துள்ளன. இதனால் பெரும்பாலானோர் வீட்டின் கீழ் தளத்தில் இருந்ததால் பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டன. சில மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தது. மரத்தின் கிளைகள் முறிந்து சாலையின் நடுவழியில் செங்குத்தாக நின்றபடியாகவும் காணப்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் பெய்த மழைக்கு பின்னர் அப்பாவுநகர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதனை பெரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

    மேலும், இதுபோன்று இன்றும் பலத்த காற்றுடன் மழைவரும் என முன் எச்சரிக்கையாக பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.  #Tamilnews

    ×